ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தலைப்பிடத் தெரியவில்லை...

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் ஒருவேளை அது குழப்பமாகக் கூட இருக்கலாம். பரவாயில்லை அது அப்படியே இருக்கட்டும். இப்போது உணவிற்காக ஏங்கவில்லை, நீரைத் தேடி அலையவில்லை பசித்தபோதும்கூட. பசி என்கிற வார்த்தையை எங்கோ கேட்ட ஞாபகம்.

செருப்பையே பார்த்திராத கால்கள் என்னைப் பார்க்கின்றன. என்னை எட்டி உதைக்க முற்படுகின்றன வெடிப்புற்ற, அழுக்கேறிய அந்தப் பாதங்கள்.கல், முள், மண், என அத்தனையையும் தாண்டி தார், சேர் என இத்தனையும் கடந்து வந்த அவை மேலும் எதையோ கடக்க முயற்சி செய்துகொண்டிருக்கின்றது.அந்தக் கால்களால் அவன் நடக்கையில், அவன் தலையில் மிதித்து முன்னேறிச் செல்கின்றோம். ஏதோ ஒரு வகையில் நானும்தான். இதையும் எழுதிப்  பணமாக்க முயற்சிக்கிறேன் இலக்கியம் என்ற பெயரால், ஓவியம் என்ற பெயரால், கலை என்ற பெயரால்.

இன்னும் இலைகளில் பச்சை ஒட்டிக்கொண்டிருக்கிறது, மழை பெய்யும் போதே அதை காணமுடிகிறது மற்ற நேரங்களில் பழுப்பாக, அழுக்காக.காக்கைகள் எச்சமிடத் தயாராகவுள்ளன அதிலிருந்து தப்பிக்க நானும்.இன்னும் வண்டிகளில் மாட்டிக்கொள்ளாமல் விளையாடிக்கொண்டிருக்கின்றன சில குழந்தைகள் சாலையோரங்களில். கையில் கைமுறுக்கோடு, மூக்கில் வழியும் சளியோடு அதைத் துடைக்காமல், எந்தக் கவலையுமில்லாமல், எந்த எதிர்பார்ப்புமில்லாமல்.அதற்கு யார் சொல்லிக்கொடுத்தது ஒரு ரூபாயைக் கேட்டுப்பெற..?

அப்போது நான் சிறுவன்.மதியம் பள்ளியில் சுண்டலைப் பெற்றேன், மாலை கடற்கரையில் சுண்டலை விற்றேன். இரயிலில் விற்பவனைவிட நான் சற்று வித்தியாசமானவன் நான் விற்கும் சுண்டலும் கூட. இங்கு பேருந்துகளில் இதெல்லாம் காணமுடியாது கூட்டத்தைத்தவிர, அவர்களுக்கிடையே ஏற்படும் கூச்சலைத்தவிர. நான் விற்பது பள்ளியில் தருவதைப்போல அல்ல, மிகவும் சுவையானது, சூடானது ஆனால் அங்கு இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது, ப‌ல நேரங்களில் சுண்டலைக்கூட.

நான் வேறெந்த‌ வித்தியாச‌த்தையும் காண‌வில்லை.காலையில் கையில் புத்த‌க‌ப்பை, மாலையில் சுண்ட‌ல் தூக்கு. தூக்க‌ச் சொல்லிய‌து அம்மா. ந‌ல்ல‌ அம்மா ப‌ல‌ருக்கு உழைக்கிறாள். அவ‌ளுக்காக‌வே நான் உழைக்கிறேன். நான் வ‌ருந்த‌வில்லை, வ‌ருத்த‌ம் என்ன‌வென்று என‌க்கு தெரியாது. இன்று விற்கும் சுண்ட‌லைப்போல் இருக்குமா, நேற்று விற்ற‌தைப்போல் இருக்குமா, அல்லது அதற்கு முந்தைய நாளைய‌தைப்போல் இருக்குமா...? தெரியாது.

ப‌ள்ளிக்கூட‌த்தை விட‌ இங்கு நான் அதிக‌ம் க‌ற்கிறேன், ம‌க்க‌ளை அவ‌ர்க‌ள‌து ம‌ன‌ங்க‌ளை.எப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள், என்ன‌ப்ப‌ற்றி விசாரிப்ப‌வ‌ர்க‌ள், என் சுண்ட‌ல‌ப்ப‌ற்றி விசாரிப்ப‌வ‌ர்க‌ள், விலைவாசியைப்ப‌ற்றி விசாரிப‌வ‌ர்க‌ள், மேலும் எதைப்பற்றியும் விசாரிக்காம‌ல், ஏதோ மன‌ விசார‌னைக்குள்ளிருப்ப‌வ‌ர்க‌ள் என‌ப்ப‌ல‌ வ‌கைக‌ளில்.



இதோ க‌ரையோர‌த்தில் அங்கே சிறுவ‌ர்க‌ளைக் காண்கிறேன்.இப்போது நானும் அங்கிருக்கிறேன் அவ‌ர்க‌ளோடு. குதிக்கிறேன், விளையாடுகிறேன்.இறுதியாக‌ அப்பாவோடு குதித்த‌து, விளையாடிய‌து, இதோ நெடுநாள்க‌ழித்து இப்போது. ம‌ற்ற‌ சிறுவ‌ர்க‌ளைப்போல‌வே புத்தாடை உடுத்தியிருக்கிறேன், த‌லைக்கு எண்ணை வைத்திருக்கிறேன், கால‌ணிக‌ள் அணிந்திருக்கிறேன், என‌க்கே நான் புதிதாக‌த் தெரிகிறேன்.சுண்ட‌ல் தூக்கிற்கு ப‌தில் கையில் ப‌லூனைப் பிடித்திருக்கிறேன். இது பிடித்திருக்கிறது,  அதை  தூக்கிப்போட்டு விளையாடுகிறேன், காற்று ப‌ல‌மாக‌ வீசுகிற‌து, ப‌லூனைப் ப‌ற‌க்க‌விட்டுவிட்டேன். யாரும் அதைப் பிடிக்க‌வில்லை பொம்மைக‌ளாய் நிற்கின்ற‌ன‌ர். துர‌த்திக்கொண்டு ஓடுகிறேன் நான், க‌ரை நீள‌த்திற்கு. அந்த‌ பொம்மைக் கூட்ட‌த்திற்குள் புகுந்து ப‌லூனைத் தேடுகிறேன்.அதோ அது உருண்டோடுகிற‌து, விடாம‌ல் துர‌த்துகிறேன், கால்க‌ள் வ‌லிக்கின்ற‌ன‌, க‌ளைப்பாக‌ இருக்கிற‌து, இருந்த‌போதிலும் ஓடுகிறேன். நெருங்கிவிட்டேன், நெருங்கிவிட்டேன், ஆனால் ப‌லூன் வெடித்துவிட்ட‌து, என் க‌ன‌வும் கூட‌. சுண்ட‌லுக்காக‌ தோள்மீது கைவைத்து கனவைக் க‌லைத்தார் ஒரு பெரிய‌வ‌ர், கொடுத்துவிட்டு அவ‌ரைக் க‌ட‌ந்தேன் ஓரமாய்த் தேங்கியிருந்த‌ நீரின் ந‌டுவே.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

நானுமல்ல நீயுமல்ல காரணம்


எதோசொல்ல நினைக்கிறேன் இங்கும‌ல்ல அங்குமல்ல ஆனால் எங்காவது.குழப்பம்தான் ஆனால் சாதாரனமானது அல்ல சற்றே கணமானது.அதை சுமக்க நினைக்கிறேன் நெடுதூரம் வரை பாதை மறையும் வரை.இருள் சூழும் வரை.தூக்கம் வரும் வரை ஆழ்ந்த தூக்கத்தை அடையும் வரை. உன்னைவிட தெளிவானவளை நான் காணவில்லை காணப்போவதுமில்லை காணவிருப்பமுமில்லை.பாதை விலக சில காலம்தான் உள்ளது விலகாத பிரியாத பாதை ஏதேனும் உண்டா? பதில் இல்லை பரவாயில்லை. சற்றே கணமான மண்வெட்டியைக் கொண்டு பாதையை உருவாக்குகிறேன்.அது நீளமானது, அகலமானது, என்னிலிருந்து உருவானது உனக்காக. எனவே அதுவே சிறந்தது எந்தப்பாதையையும் விட. நான் முட்களை அகற்றுகிறேன் மரங்களை அல்ல.மரங்கள் ஓங்கிவளர்ந்தவை விண்ணை முட்டுமளவு.இங்கு ஒளியில்லை அவைகளால் இருந்தபோதிலும் பரவாயில்லை உன் ஒளியில் நடக்கவே விரும்புகிறேன்.வழிநெடுக பட்டாம்பூச்சி, அவற்றின் வண்ணங்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை.அவை பறக்கின்றன திடீரென்று பூக்களிலிருந்து.சற்றே எதார்த்தமானதுதான் அனைவர்க்கும் ஆனால் எனக்கில்லை.அவைகளைப்பார்த்து நீயும் பற‌க்க நினைக்கிறாய் உன்னைப்பார்த்து நானும்.என்னிடம் சிறகுகள் இல்லை ஆனாலும் பறப்பேன் பெரிய இலைகளைக்கொண்டு.ஏனோ நீ பட்டாம்பூச்சியாகவே மறிவிட்டாய், இப்போது உன் வண்ணங்கள் என்னை ஏதோ செய்கின்றன. நீ பறந்தாய் நானும் பறந்தேன் எவ்வளவு தூரமென தெரியாது இல்லாத சிறகு இருப்பதாய் கொண்டு பறந்தேன்.என் சிறகு வலிக்கும்முன் உன் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டாய்.பலவண்ணங்கள் நீ மட்டும் தெளிவாகத் தெரிகிறாய் ஆம் மிகத் தெளிவாக.என் கண்ணாடியை கொஞ்சம் துடைக்கிறேன் கண்களையும் தான். நீ முன்பெப்போதையும் விட மகிழ்ச்சியாய் இருக்கிறாய்.உண்மைதானா? உண்மை எப்போதும் உண்மையல்ல.உன் சிறகு வலித்திருக்கும் காற்று அதை கிழித்திருக்கும்,சிறாய்த்திருக்கும்.உன்வலியை நான் உணர்கிறேன் முழுவதுமல்ல நீ சொல்லிய மட்டும். உணராத வரை வலி வலிதான் வார்த்தையளவில் உணர்ந்தால் அது வேதனை உள்ளுணர்வில். நாம் எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை சொல்வதில்லை முழுமையாக, நாம் எதை எழுத நினைக்கிறோமோ அதை எழுதுவதில்லை முழுமையாக.


அகச்சிக்கல் அதன் முடிச்சைத் தேடுகிறேன் சிக்கலை அவிழ்க்க அல்ல அந்த சிக்கலை புரிந்துகொள்ள... முழுமையாக அதை உணரவே விரும்புகிறேன்.அதிலிருந்து விடுபட அல்ல.புலிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது எனது கானககத்திலும்.இங்கு மழை கொஞ்சம் அதிகம் வெயிலில்லை விடிந்தபொழுதும்.எப்படி முடிப்பதென்று தெரியவில்லை ஆனால் இதற்கு மேல் எழுதமுடியவில்லை.