வெள்ளி, 3 டிசம்பர், 2010

நானுமல்ல நீயுமல்ல காரணம்


எதோசொல்ல நினைக்கிறேன் இங்கும‌ல்ல அங்குமல்ல ஆனால் எங்காவது.குழப்பம்தான் ஆனால் சாதாரனமானது அல்ல சற்றே கணமானது.அதை சுமக்க நினைக்கிறேன் நெடுதூரம் வரை பாதை மறையும் வரை.இருள் சூழும் வரை.தூக்கம் வரும் வரை ஆழ்ந்த தூக்கத்தை அடையும் வரை. உன்னைவிட தெளிவானவளை நான் காணவில்லை காணப்போவதுமில்லை காணவிருப்பமுமில்லை.பாதை விலக சில காலம்தான் உள்ளது விலகாத பிரியாத பாதை ஏதேனும் உண்டா? பதில் இல்லை பரவாயில்லை. சற்றே கணமான மண்வெட்டியைக் கொண்டு பாதையை உருவாக்குகிறேன்.அது நீளமானது, அகலமானது, என்னிலிருந்து உருவானது உனக்காக. எனவே அதுவே சிறந்தது எந்தப்பாதையையும் விட. நான் முட்களை அகற்றுகிறேன் மரங்களை அல்ல.மரங்கள் ஓங்கிவளர்ந்தவை விண்ணை முட்டுமளவு.இங்கு ஒளியில்லை அவைகளால் இருந்தபோதிலும் பரவாயில்லை உன் ஒளியில் நடக்கவே விரும்புகிறேன்.வழிநெடுக பட்டாம்பூச்சி, அவற்றின் வண்ணங்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை.அவை பறக்கின்றன திடீரென்று பூக்களிலிருந்து.சற்றே எதார்த்தமானதுதான் அனைவர்க்கும் ஆனால் எனக்கில்லை.அவைகளைப்பார்த்து நீயும் பற‌க்க நினைக்கிறாய் உன்னைப்பார்த்து நானும்.என்னிடம் சிறகுகள் இல்லை ஆனாலும் பறப்பேன் பெரிய இலைகளைக்கொண்டு.ஏனோ நீ பட்டாம்பூச்சியாகவே மறிவிட்டாய், இப்போது உன் வண்ணங்கள் என்னை ஏதோ செய்கின்றன. நீ பறந்தாய் நானும் பறந்தேன் எவ்வளவு தூரமென தெரியாது இல்லாத சிறகு இருப்பதாய் கொண்டு பறந்தேன்.என் சிறகு வலிக்கும்முன் உன் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டாய்.பலவண்ணங்கள் நீ மட்டும் தெளிவாகத் தெரிகிறாய் ஆம் மிகத் தெளிவாக.என் கண்ணாடியை கொஞ்சம் துடைக்கிறேன் கண்களையும் தான். நீ முன்பெப்போதையும் விட மகிழ்ச்சியாய் இருக்கிறாய்.உண்மைதானா? உண்மை எப்போதும் உண்மையல்ல.உன் சிறகு வலித்திருக்கும் காற்று அதை கிழித்திருக்கும்,சிறாய்த்திருக்கும்.உன்வலியை நான் உணர்கிறேன் முழுவதுமல்ல நீ சொல்லிய மட்டும். உணராத வரை வலி வலிதான் வார்த்தையளவில் உணர்ந்தால் அது வேதனை உள்ளுணர்வில். நாம் எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை சொல்வதில்லை முழுமையாக, நாம் எதை எழுத நினைக்கிறோமோ அதை எழுதுவதில்லை முழுமையாக.


அகச்சிக்கல் அதன் முடிச்சைத் தேடுகிறேன் சிக்கலை அவிழ்க்க அல்ல அந்த சிக்கலை புரிந்துகொள்ள... முழுமையாக அதை உணரவே விரும்புகிறேன்.அதிலிருந்து விடுபட அல்ல.புலிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது எனது கானககத்திலும்.இங்கு மழை கொஞ்சம் அதிகம் வெயிலில்லை விடிந்தபொழுதும்.எப்படி முடிப்பதென்று தெரியவில்லை ஆனால் இதற்கு மேல் எழுதமுடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக