ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நாட்குறிப்பில்லாத‌வ‌னின் ப‌ய‌ண‌க்குறிப்பு

ந்த எதிர்பார்ப்புமில்லாமல் இந்த ஆண்டினை திளைக்க குடித்து வரவேற்றேன். குறைந்த விலையில் பாண்டியில் சரக்கு கிடைக்கும் என்பதாலோ அல்லது பிரெஞ்சு குடிமக்களுக்கு மத்தியில் குடித்து புத்தாண்டை வரவேற்கும் எண்ணமோ நண்பர்கள் அழைத்ததும் மறுக்கமல் அனைவரும் பாண்டியில் சங்கமித்து சளைக்க சளைக்க குடித்தோம். அங்கே ஒரு பாட்டில் பீரின் விலை ரூ.55, கள்ளத்தனமாக இரவு எந்த நேரத்தில் வாங்கினாலும் கூட ரூ.60 ஐத் தாண்டாது... ஆனால் நமது சென்னையில் இரவு 10.30 ஐத் தாண்டி ஒரு நிமிடம் கழித்தாலும் குவாட்டர் மாணிட்டர் 60 வதிலிருந்து 100 ஐத் தொட்டுவிடும் அபாயம் உள்ளது. ஆகவே குடிமக்களே கொஞ்சம் கவணம் தேவை..! எங்கு சென்றாலும் போலீசுக்கும் எனக்கும் நீங்காத சாபம் தொடருகிறது, இருந்தபோதிலும் அந்த ஊரின் வழிதெரியாத பல சந்துக்குள் புகுந்து தப்பித்து மீண்டு எங்களுடைய காரில் புகுந்துகொண்டோம்.(என்ன காரணம் என்று கேட்காதீர்கள் குடித்தவனுக்கு ஒன்றா இரண்டா காரணங்கள் அதுவும் போலீசிடம் அடிவாங்க...!)இப்படியாக பாண்டிச்சேரி சிறப்பு காவல்துறை எங்களை துரத்தி துரத்தி புத்தாண்டு வாழ்த்து சொல்லியது.

இப்படி கோலாகலமாக புத்தாண்டு கழித்து பல்கலைக்கழகம் வந்த நாள் எதிர்பார்க்கத சம்பவமொன்று நிகழக்காத்துக் கொண்டிருந்தது. யாழ் பல்கலைக்கழக இதழியல் மாணவர்கள் சென்னைப்பல்கலைக்கழக இதழியல் மாணவர்களாகிய எங்களுடன் இணைந்து ஒருவாரகால புத்தாக்கப் பயிற்சி மேற்கொள்ளவிருப்பதே அந்த எதிர்பாரத சம்பவம். அந்த ஒருவாரம் என் வாழ்வில் மிகமுக்கியமான காலகட்டம் மிகக்குறுகியதாக இருந்த போதிலும். அதன் முதல் கட்டமாக நாங்களும் அவர்களும் பேசிபழகி கருத்துபரிமாற்றம் நடக்க ஒரு சந்தர்ப்பம் உருவாக்கித்தரப்பட்டது. மெரினா கடற்கரை அன்று மாலை 6 மணிக்கு எங்கள் வருகைக்காக காத்திருந்தது. உப்புக்காற்றிற்கு சோகத்தைக் கரைக்கும் தன்மையும், மகிழ்ச்சியை ஏற்கும் தன்மையும் உள்ளதென நான் நம்புவதால் இந்த இரண்டு தருணங்களிலும் நான் அங்கே சென்றுவிடுவேன். துறைத்தலைவரும் எங்களை அங்கே அனுப்பியதும் எனக்கு சற்று நிம்மதியாகவே இருந்தது. நாங்கள் குழுக்களாகப் பிரித்து அனுப்பப்பட்டோம். என்னுடைய குழுவில் பெண்கள் கொஞ்சம் கூட... எனக்கு அவர்கள் ஒன்றை தெளிவாக உனர்த்திவிட்டனர் அதாவது கடலில் கால் நனைக்க வேண்டும் அதன் பிறகே சுண்டல், மாங்காய்பத்தை என அனைத்தையும் திண்ண வேண்டுமென்று...! நல்ல வேளையாக என்னோடு வந்த என்வகுப்புத் தோழன் அவர்களுடன் நெருக்கமாகிவிட்டான். பெண்களை சமாளிப்பதற்காகவே பிறந்தவன் அவன்..! எல்லாம் முடிந்து நாங்கள் வட்டமாக மணற்பரப்பில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருக்கையில்(!) யாழ் நண்பன்சினிமா நட்சத்திர உருவங்களோடு புகைப்படமெடுக்குமிடத்தில், அவற்றைப்போலவே திருமாவளவனின் அட்டையும் இருப்பதைக்கண்டுவிட்டான் போலும் உடனே அதனோடு படமெடுக்க வேண்டுமென்றான்.. அவனைக் கட்டுப்படுத்தி மணலில் புதைக்காத குறையாக் குறைபட்டுக்கொண்டேன்... பிறகு முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் அவரது அரசியல் சாதுர்யத்தை எடுத்துக் கூறிய பின்னாளில் புரட்சிவீரன், மாவீரன் என்ற அவரது உருவமிட்ட பதாகைகளைக் கண்டதும் மண்ணாங்கட்டி, மயிராண்டி(சில வார்த்தைகள் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது) என்றெல்லாம் கூறி அவரது உண்மையான அடைமொழிகளை எங்கிருந்தோ கற்றிருந்தான். தலித்களின் தலைவன் என அவரை இனியும் யாரேனும் சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டால் கவலை கொள்ளாதீர்கள் மலம் அள்ளும் தொழில் உங்களுக்கு நிச்சயமாக்கித் தரப்படும்..

அப்போது நான் அவ‌ர்க‌ளுடைய‌ போராட்ட‌ம் ப‌ற்றி முத‌லில் பேசுவ‌தாக‌ இல்லை ஆனால் அவ‌ர்க‌ள் அதைப்ப‌ற்றி பேச‌ விரும்பிய‌தால் ஆர‌ம்பித்தோம். க‌ள‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளைக்காட்டிலும் நான் ஒன்றும் அறிந்த‌வ‌ன் அல்ல‌. ஆனால் இங்குள்ள‌ சீமான்க‌ளும், தோழ‌ர்க‌ளும், த‌ம்பிமார்க‌ளும் அம்ம‌க்க‌ளை எதை நோக்கி இழுக்கின்ற‌ன‌ர்..? அல்ல‌து அவ‌ர்க‌ளுக்கு எதைப் பெற்றுத்த‌ர‌ போராடுகின்ற‌ன‌ர்..? என்ப‌து குறித்து அவ‌ர்க‌ள‌து சுய‌லாப‌ அர‌சிய‌ல் பற்றி பேசினேன். "த‌னி ஈழ‌ம் இது ஒன்றே வ‌ழி" என்று இன்றைய‌ சூழ‌லில் சொல்லிக்கொண்டு திரிவ‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ அயோக்ய‌த்த‌ன‌ம்? இவ‌ர்க‌ள‌து முர‌ட்டு வாத‌ம் யாரை ப‌லிக‌டாவாக்கிய‌து இனியும் யாரை ப‌லிகொடுக்க‌க் காத்திருக்கிற‌து? இதுதான் என்கேள்வி... அவ‌ர்க‌ளில் யாரும் இனி துப்பாக்கியேந்தி போராட‌ விருப்பம்கொள்ளாத‌வ‌ர்க‌ள். போர்க‌ள‌த்தை த‌க‌ர்த்து வாழ்க்கைக்கான‌ மாற்றுக்க‌ள‌த்தை தேடிக்கொண்டிருக்கின்ற‌ன‌ர்.

மேலும் ஷோபாச‌க்தியின் வ‌ரிக‌ள் உங்க‌ளை என்ன‌ செய்கின்ற‌ன‌ என்ற‌ கேள்வியிலிருந்து கொதித்துக்கொண்டு முளைத்தான் ந‌ண்ப‌னொருவ‌ன்.ஒருமையில் அவ‌ரை வ‌சைபாடி உங்க‌ளுக்கு மூளைச்ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்றான்... எங்க‌ளால் எல்லைக‌ட‌ந்து பேச‌முடியாது அப்ப‌டி பேசினால் எங்க‌ளால் எல்லையை க‌ட‌க்க‌ முடியாது என்று சொன்னான்... பின்னாளில் நானும் அவ‌னும் பேசினோம் இர‌ண்டு வார்த்தைக‌ள் பேசிய‌தும் குறுக்கிட்ட‌வ‌ன் அன்றுமுத‌ல் இர‌வு ம‌ணி 2 ஐக் க‌ட‌ந்தும் பேசிக்கொண்டிருந்தோம்... அப்போதெல்லாம் நான் ஒன்றை அழுத்திக்கூறினேன் "நீ போராளியாக‌ இருந்த‌ வ‌ரையில் உன் சார்பு நிலைக்கொள்கைக‌ள் அத‌ன் போக்குக‌ள் ச‌ரியான‌தாக‌ இருக்க‌லாம் ஆனால் நாம் இப்போது ஊட‌க‌விய‌ளாள‌ன் என்ற‌ பொதுத்த‌ள‌த்தில் இருக்கின்றோம் ப‌க்க‌ சார்பை நாம் உடைக்க‌வேண்டிய‌ த‌ருண‌மிது, ந‌ம் ச‌மூக‌ம், ந‌ம் ம‌க்க‌ள், ந‌ம் இன‌ம், ந‌ம் மொழி என‌ நாம் த‌மிழ‌ர் என்ற‌ அடிப்ப‌டையில் இய‌ங்கும் வ‌ரை இன‌வாத‌ம், மொழிவாத‌ம், என்று பிரிவின‌வாத‌ம் தொட‌ரும் ஆக‌ இவைய‌னைத்தையும் உடைத்து எல்லைய‌ற்ற‌ ம‌ன‌ப்பான்மையை உருவாக்க‌ வேண்டும் அது ந‌ம‌து பார்வையை உள‌க‌ளாவிய‌ ம‌க்க‌ள் குறித்தும் சிந்திக்க‌த் தோற்றும், உல‌க‌ அர‌சிய‌ல், உல‌க‌ இல‌க்கிய‌ம், உல‌க‌ சினிமா இவை உன்னை ப‌க்குவ‌ப்ப‌டுத்தும்" என்றேன் இப்போதும் அவ‌ன் குறுக்கிட்டான் ஆனால் எங்க‌ளுக்கு மூளைச்ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்றான்... என‌க்கு வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து ஏனெனில் அவ‌ர்க‌ளை சிறு பிள்ளை முத‌ல் கிள்ளிக்கிள்ளி வ‌ள‌ர்த்திருக்கிற‌து அவ‌ர்க‌ள‌து வ‌ர‌லாற்றுப் புத்த‌க‌ம்... ந‌ம்முடைய‌து த‌ட‌விக்கொடுக்கும் வ‌ர‌லாறென்றால் அவ‌ர்க‌ளுடைய‌து கிள்ளிவிடும் வ‌ர‌லாறாக‌ இருக்கிற‌து...

எந்த‌வொரு எல்லையில் நிற்கும் போர்வீர‌னும் த‌ன் நாட்டில் ந‌ட‌க்கும் ஊழ‌ல் குறித்து எண்ணுவ‌தில்லை அப்ப‌டி நினைத்தால் அவ‌னால் போர்க‌ள‌த்தில் நிற்க‌ முடியாது அது ம‌க்க‌ள் மேல் கொண்ட‌ ப‌ற்று அதை நாம் தேச‌ப்பற்று என்கிறோம் ஆக‌ அந்த‌ தேச‌ப்ப‌ற்று அவ‌னை அழுத்திப்பிடித்திருக்கிற‌து அவ‌ன் கொண்டுள்ள அந்த‌ தேச‌ப்ப‌ற்றுதான் இங்கிருக்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளின் த‌வ‌றுக்கு கார‌ண‌மாக் அமைகிற‌து. ஆக‌ இந்த‌ இட‌த்தில் தேச‌ப்ப‌ற்றென்ப‌து கேள்விக்குள்ளாகிற‌து. எந்த‌வொரு இந்திய‌னும் பாகிஸ்தானியை க‌ண்ட‌ம‌த்திர‌த்திலேயே அடித்துவிட‌ப்போவ‌த்ல்லை அதேபோல் தான் அவ‌ர்க‌ளும் அப்ப‌டி ஒருபிர‌ச்ச‌னையும் ம‌க்க‌ளுக்குள் இல்லை ஆனால் விளையாட்டு என்று சொல்ல‌ப்ப‌ட்டாலும் கூட‌ அவ‌னை வீழ்த்திவிட‌ வேண்டுமென்று ந‌ம் உள்ள‌ம் ப‌ட‌பட‌க்கிற‌தே... ஆக‌ எவ்வ‌ள‌வு நுட்ப‌மாக‌ சிறு பிள்ளைக‌ள் முத‌ல் பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ரை ந‌ம‌து மூளை ம‌டிப்புக‌ளில் விளையாடுகின்ற‌து இந்த‌ தேச‌ப‌க்தி என்ற சொல்...!


இர‌ண்டுநாள் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் நிக‌ழ்ந்த‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ளில் பேசிய‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள், பெய‌ர‌ள‌வில் ஞான‌த்தைக்கொண்ட‌வ‌ர்க‌ள் உட்ப‌ட‌ த‌ங்க‌ள‌து இய‌லாமையை மேடையேற்றிச் சென்றுவிட்ட‌ன‌ர்... இந்த‌ பேச்சுக்க‌ளிலிருந்து நான் கொஞ்ச‌ம் ப‌ல‌மும், ப‌ல‌வீன‌மும் அடைந்தேன் என்ப‌தே உண்மை.ந‌ண்ப‌ன் ராஃபி அடிக்க‌டி சொல்வான் "இங்கே செழிப்பான‌ இத‌ழிய‌ளாள‌னாக‌ வாழ‌வும் வாய்ப்பிருக்கிற‌து வாய்ப்பேயில்லாம‌ல் அழிந்துபோக‌வும் வ‌ழியிருக்கிற‌து, நீ எதைத் தேர்ந்தெடுக்க‌ப்போகிறாய்" என்பான் உண்மையில் அவ‌ன் சொல்லும் க‌ணம் சாலையில் தென்ப‌டும் வாக‌ன‌ங்க‌ள் கூடுத‌ல் வேக‌த்தில் செல்வ‌துபோல் தோன்றும் என‌க்கு...! மாற்று ஊட‌க‌மான‌ இனைய‌த்தின்மீது ஞானிக்கு ந‌ம்பிக்கையில்லையாம் ஏனென்றால் அத‌னை எத்தைனைபேர் ப‌டிப்ப‌ர் அல்ல‌து எத்த‌னைபேரை சென்ற‌டையும் என்ப‌தில் இவ‌ர்க‌ளுக்கு ஒரே குழ‌ப்ப‌மாம்...! விக்கிலீக்ஸ் த‌ற்போது உல‌க‌த்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் மாற்று ஊட‌க‌ம்தானே? ஆக‌ நீங்க‌ள் மொட்டைமாடியில் வ‌டாம் போட்ட‌தையும், மிள‌காய் வ‌த்த‌ல் போட்ட‌தையும், இன்னாருக்கு ச‌லாம் போட்ட‌தையும் எழுதினால் அதையார் ப‌டிப்பார்க‌ள்(உங்க‌ளுடைய ச‌ந்தேக‌ம் ச‌ரியான‌து தான் ஆனாலும் இதைப்ப‌டிக்க‌வும் ஆள் இருக்கிற‌து ஐயா!!!) ராஜீவ் கொலைக்கு பிற‌கு புகலிக‌ளைப்ப‌ற்றியும் த‌மிழ்பிர‌ச்ச‌னை ப‌ற்றியும் பேசாத‌ நீங்க‌ள், இல‌ங்கை ச‌ர்வ‌தேச‌ திரை விழாவுக்கு த‌மிழ்த் திரையுல‌கு க‌ல‌ந்துகொள்ளாத‌த‌ற்கு ஏனைய்யா க‌டிந்துகொள்கிறீர்...? கேட்டால் ப‌த்திரிக்கையாள‌னுக்கு விம‌ர்ச‌ன‌ம் செய்யும் உரிமை உண்டு என‌து வாய்க்கு பூட்டு போடாதீர்க‌ள் என்பீர், ஆனால் நீங்க‌ளே ஒரு பூட்டை ம‌ட்டிக்கொண்டு அலைகிறீரே உங்க‌ளுக்காக‌ ம‌ட்டும் தானே அதைத் திற‌க்கிறீர்...

உப்பும் ச‌ப்புமான 2 நாள் ப‌யிற்சி முடிந்து 4 நாட்க‌ள் தென்த‌மிழ‌க‌ சுற்றுலாவை எங்க‌ள் துறை ஏற்பாடு செய்திருந்த‌து. ஆனால் செல்லும்முன், ப‌ய‌ண‌த்தின்போது வ‌ழியில் ஏற்ப‌டும் பிர‌ச்ச‌னைக‌ளுக்கோ அல்ல‌து உங்க‌ள் உயிருக்கோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் எவ்வித‌ பொறுப்பும் ஏற்காது என்ற உயிலினை எங்க‌ளிட‌மிருந்து பெற்றுக்கொண்டு அன்போடு வ‌ழிய‌னுப்பிய‌து..! அவையாவும் நான் இதுவ‌ரையிலும் சென்றிராத‌ ஊர்க‌ள் இருந்த‌ போதிலும் செல்லும் இட‌ங்க‌ள் மீது என‌க்கு கொஞ்ச‌மும் ஈடுபாடிருக்க‌வில்லை அவ‌ர்க‌ளோடு குறிப்பாக‌ அந்த‌ ந‌ண்ப‌னோடு பேச‌வேண்டும் என்ற‌ எண்ண‌மே முழுக்க‌ இருந்த‌து. நெடிய‌ ப‌ய‌ண‌ம் அது ஆனாலும் நாங்க‌ள் பேசிய‌தைவிட‌, ப‌கிர்ந்துகொண்ட‌தைவிட‌, புரிந்துகொண்ட‌தைவிட‌ ஒன்றும் நெடிய‌தாக‌த் தோன்ற‌வில்லை. வ‌லிக‌ள் நிறைந்த‌ அவ‌ன‌து வாழ்க்கையை கேட்ட‌தும் நானெல்லாம் அல்ல‌து நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்றே எண்ண‌த்தோன்றுகிற‌து. நான் ஒன்றைத் தெளிவாக‌ப் புரிந்துகொண்டேன், வ‌ந்திருந்த‌ அத்த‌னைபேரும் அவ‌ர்க‌ளுக்குள் இவ‌ன்தான் என் சிற‌ந்த‌ ந‌ண்ப‌ன் என்று சொல்லிக்கொண்டாலும் அதில் முழுமை இல்லை த‌ன்னிச்சையாக‌வே ஓர் வெற்றிட‌ம் புகுந்திருக்கிற‌து. மொழிரீதியாக‌ ஒன்றுப‌ட்டிருந்தாலும் பொருளாதார‌ம் அவ‌ர்க‌ளை  ஒன்றினைய‌விடுவ‌தில்லை... இதை என்னிட‌ம் அவ‌ன் சொல்கையில், என் விர‌லிடுக்கிலிருந்த‌ சிக‌ரெட்டுக்கு உத‌டுக‌ள் அழுத்த‌ம் ச‌ற்று அதிக‌ம் கொடுக்க‌, புகையின் அட‌ர்த்தியும் ச‌ற்றே அதிக‌மாக‌ வெளியேறிய‌து. அதைப்பிடுங்கி அவ‌னும் அவ்வாறே செய்தான். நான் புகைப்ப‌தால் என்னை வெறுக்க‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் இந்த‌க்க‌ண‌மே இதைப்ப‌டிக்கும் போதே வெறுத்துவிடுங்க‌ள் யாருக்காக‌வும் நான் நியாய‌ம் க‌ற்பிக்க‌ விரும்ப‌வில்லை. நான் குடித்துவிட்டு இர‌வு முழுக்க‌ சாலையோர‌த்தில் கிட‌ந்த‌வ‌ன் எந்த‌ வாச‌னைத் திர‌விய‌மும் என் இய‌ற்கை ம‌ண‌த்தை மாற்றிவிடாது...

அதே கோப‌த்தோடு ஒன்றை சொல்லி விடுகிறேன்... என்னோடு ப‌யிலும் யாழ்ப்பான‌ பெண்ணுக்கு அவ‌ள்ம‌ட்டுமே அனைத்து பிர‌ச்ச‌னைக‌ளையும் ச‌ந்தித்த‌வ‌ள் அன்ற‌ நினைப்பும், வ‌ந்திருந்த‌ ம‌ற்ற‌ யாருக்கும் அவ்வ‌ள‌‌வு பாதிப்பு இல்லை என்ற‌ ம‌ன‌ப்பான்மை வேறூன்றி கிட‌க்கிற‌து. ப‌த்த‌டி தூர‌த்தில் பார்த்துவிட்டு இதை நான் சொல்ல‌வில்லை குறைந்த‌து ப‌த்து வார்த்தைக‌ள் பேசிய‌ பின்புதான் புரிந்துகொண்டு சொல்கிறேன். அந்த‌ ம‌க்க‌ளுக்குள்ளாக‌வே ஒரு புரித‌ல், ஒற்றுமை இல்லாத‌போது இந்தியாவிலிருக்கும் த‌மிழ‌ர்க‌ளால், ஊட‌க‌ங்க‌ளால் என்ன‌ பெரிதாக‌ பிடிங்கிவிட‌முடியும்?

மேலும் அவ‌ள், ப‌யிற்சிய‌ளிக்க‌ வ‌ந்த‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரிட‌மும், ஒரேரீதியான‌ கேள்வியையும் க‌ருத்தையும் முன்வை‌த்தாள் என்ன‌வெனில்,"நீங்க‌ள் ஏன் ஈழ‌ம் குறித்து உண்மையை எழுத‌வில்லை? நானாக‌ இருந்தால் உயிரைக்கொடுத்து எழுதியிருப்பேன், எழுதுவேன்" என்கிறாள்... ஒன்றை உடைத்து சொல்ல‌வேண்டுமென்றால், நானும் மேற்குறிப்பிட்ட‌ அந்த‌ ந‌ண்ப‌னும் பேசிய‌ பேச்சுக்க‌ளை அவ‌ன் க‌ட்டுரையாக‌ எழுதி அவ‌னது விரிவுரையாள‌ரிட‌ம்(பெய‌ர்சொல்ல‌ வேண்டிய‌தில்லை) கொடுத்த‌போது அத‌னை முழுவ‌தும் நிராக‌ரித்து, என்னைப்ப‌ற்றியும், நான் எங்கே பிற‌ந்தேன், எங்கே வ‌ள‌ர்ந்தேன், எங்கே க‌க்கா போனேன் என்றபாணியில் எழுதுமாறு சொல்லியிருக்கிறார்...! இப்போது நீ சொல் ப‌யிற்றுவிக்கும் ஆசிரிய‌ர்க‌ள் இவ்வாறு இருப்பின் அவ‌ன் என்ன‌ செய்ய‌... நீ சொல்கிறாய் நான் க‌ன‌டா சென்று என‌து அண்ண‌ன் ந‌ட‌த்தும் தொலைக்காட்சியில் நிக‌ழ்ச்சித் தொகுப்பாளியாக‌வோ அல்ல‌து செய்தி வாசிப்பாளியாக‌வோ ஆகியே தீருவேன் என்று... க‌வ‌லைப்ப‌டாதே நீ சொன்னாயே "என‌து உயிர் நீங்கினாலும் ப‌ர‌வாயில்லையென்று" நீ செய்ய‌ப்போகும் செய‌லில் அது ந‌ட‌க்காது..(புர‌ட்சிக்கான‌ தொலைக்காட்சிய‌ல்ல‌வே அது...!) உன‌க்காக‌ pizzaவும், burgerம் காத்திருக்கும் திண்றுவிட்டு pepsi குடித்துக்கொள்...

காலையில் எழுந்து ப‌ன்னையும், டீயையும் சிற்றுன்டியாக‌ முடித்து ம‌திய‌ சாப்பாட்டுக்கு என்ன‌ செய்யலாம் என்ற‌ நிலையிலும் ஈழ‌ச்சூழ‌லையும், இல‌ங்கை அர‌சையும் புனைவுப்பெய‌ரில் கிழித்துக்கொண்டிருப்ப‌வ‌ன் அவ‌ன் நினைவில் கொள். உண்மையான‌ பெய‌ரில் எழுதினால் கூட‌ இருப்ப‌வ‌னே காட்டிக்கொடுத்துவிடுவான் என்ப‌தையும், அந்த‌ எழுத்துக்க‌ள் அவ‌ன் ம‌திய‌சாப்பாட்டிற்கு கூட‌ வ‌ழிவ‌குப்ப‌தில்லை என்ப‌தையும் உயிரைக்கொடுக்க‌வும் துணிந்த‌ நீ புரிந்துகொள்...

கூட‌ப்பிற‌ந்த‌ அண்ண‌ன் போரில் உயிரிழ‌ந்த‌ த‌க‌வ‌ல் தெரிந்த்தும் அம்மா மூக்கில் ர‌த்த‌ம் வ‌ழிந்து ப‌டுத்த‌ ப‌டுக்கையாகிவிட்டாள். அப்பா ஆன்மீக‌த்தை ம‌ட்டுமே ந‌ம்பியிருக்கிறார்.அட‌க்க‌ம் செய்ய‌ ச‌வ‌ப்பெட்டி கிடைக்காம‌ல், உட‌லை ச‌ர‌த்தில் சுற்றி புதைத்துவிட்டு, பிழைப்போமா மாட்டோமா என்ற‌ நிலையில் உல‌க‌த்தின் புவிஈர்ப்பு விசையில் இன்னும் அவ‌ன் உட‌லும் உயிரும் ஒட்டிக்கொண்டிருக்கிற‌து. நாம் சுற்றுலாவில் இருக்கையில் அவ‌ன‌து அம்மா உட‌ல் நிலை மோச‌மாகி கொழும்புவிற்கு கொண்டுசெல்ல‌ப்ப‌ட்டிருந்தாள் எதையுமே வெளிக்காட்டாம‌ல் ந‌ம்மோடு சுற்றிக்கொண்டிருந்தான் அவ‌ன்...அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌னைப் வெறும‌னே பார்க்கையில் எந்த‌ப் பிர‌ச்ச‌னையுமில்லாத‌வ‌னாக‌த் தான் தோன்றும்... நான் எந்த‌ த‌ருண‌த்திலும் அவ‌னை நேர்காண‌ல்(!) செய்ய‌ நினைக்க‌வில்லை ஆனால் நீங்க‌ள் அத‌னை செவ்வ‌னே செய்து முடித்தீர்க‌ள்!!! அருமை...

உக்கிர‌மான‌ போர் சூழ‌லில் கொத்துக்குண்டால் கால்க‌ளை இழ‌ந்து உயிரோடு போராடிக்கொண்டிருந்த‌ பெண்ணின் மீது ஓலையைப்போட்டு தீயிட்டுக்கொளுத்தினேன் என்றான் அத‌ற்குமேல் என்னால் கேட்க‌ முடியாம‌ல் நிறுத்திவிட்டு என்னைய‌றியாம‌ல் அழுதுகொண்டிருந்தேன்.அப்போது ந‌ள்ளிர‌வு ம‌ணி ஒன்றைக் க‌ட‌ந்திருந்த‌து. அவ‌ன் நெஞ்சு வ‌லிக்கிற‌து என்று துடித்துக்கொண்டிருக்கையில் செய்வ‌த‌றியாம‌ல் திண‌றினின்றேன்.. நீங்க‌ள் அனைவ‌ரும் உங்க‌ள‌து ஆழ்ந்த‌ உர‌க்க‌த்தில் தோன்றிய‌ க‌ன‌வுக‌ளில் இருந்திருப்பீர்க‌ள்... எப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌ன‌நிலையுடைய‌வ‌னாக‌ இருந்திருந்தால் நிம்ம‌தியை நோக்கி ஓர் உயிரை கொளுத்தியிருப்பான்??? எப்ப‌டிப்ப‌ட்ட‌ ஓர் நிலைமை இன்னும் அதை நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த‌ த‌ருண‌த்தில் நாங்க‌ள் இருவ‌ரும் அமைதியானோம். அமைதி நீடித்த‌து பேருந்து செல்லும் ஓசையைத்த‌விற‌ வேறொன்றுமில்லை.ஒருவ‌ரையொருவ‌ர் பார்த்துக்கொண்டோம் புகைக்க‌த் தொட‌ங்கிவிட்டோம், புகை ம‌ண‌ம் அதிக‌ரித்த‌து ஜ‌ன்ன‌லை கொஞ்ச‌ம் திறந்துவிட்டேன் காற்று உள்ளே நுழைந்த‌து. இருவ‌ருக்குள்ளும்...


5 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. பர்குணா நீ உன் நன்பனை பற்றியும், அவன் பட்ட துயரங்கள் பற்றியும் சொல்கிறாய் சரி... அதை யாருடனும் ஒப்பிட்டு பேசுவது சரியாக தோன்றவில்லை நன்பா.நான்கு உயிரை இழந்தால் தான் இழப்பு என்று இல்லை ஒரு உயிராக இருந்தாலும் அது இழப்பு தான்.. நான் சொல்லுவதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்..
    மனதில் பட்டதை கூறினேன்...

    அன்புடன் மகி...

    பதிலளிநீக்கு
  3. மத்தவங்க கஷ்டபடுற மாதிரி எழுதாத...

    remove this content


    அதே கோப‌த்தோடு ஒன்றை சொல்லி விடுகிறேன்... என்னோடு ப‌யிலும் யாழ்ப்பான‌ பெண்ணுக்கு அவ‌ள்ம‌ட்டுமே அனைத்து பிர‌ச்ச‌னைக‌ளையும் ச‌ந்தித்த‌வ‌ள் அன்ற‌ நினைப்பும், வ‌ந்திருந்த‌ ம‌ற்ற‌ யாருக்கும் அவ்வ‌ள‌‌வு பாதிப்பு இல்லை என்ற‌ ம‌ன‌ப்பான்மை வேறூன்றி கிட‌க்கிற‌து. ப‌த்த‌டி தூர‌த்தில் பார்த்துவிட்டு இதை நான் சொல்ல‌வில்லை குறைந்த‌து ப‌த்து வார்த்தைக‌ள் பேசிய‌ பின்புதான் புரிந்துகொண்டு சொல்கிறேன். அந்த‌ ம‌க்க‌ளுக்குள்ளாக‌வே ஒரு புரித‌ல், ஒற்றுமை இல்லாத‌போது இந்தியாவிலிருக்கும் த‌மிழ‌ர்க‌ளால், ஊட‌க‌ங்க‌ளால் என்ன‌ பெரிதாக‌ பிடிங்கிவிட‌முடியும்?

    மேலும் அவ‌ள், ப‌யிற்சிய‌ளிக்க‌ வ‌ந்த‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரிட‌மும், ஒரேரீதியான‌ கேள்வியையும் க‌ருத்தையும் முன்வை‌த்தாள் என்ன‌வெனில்,"நீங்க‌ள் ஏன் ஈழ‌ம் குறித்து உண்மையை எழுத‌வில்லை? நானாக‌ இருந்தால் உயிரைக்கொடுத்து எழுதியிருப்பேன், எழுதுவேன்" என்கிறாள்... ஒன்றை உடைத்து சொல்ல‌வேண்டுமென்றால், நானும் மேற்குறிப்பிட்ட‌ அந்த‌ ந‌ண்ப‌னும் பேசிய‌ பேச்சுக்க‌ளை அவ‌ன் க‌ட்டுரையாக‌ எழுதி அவ‌னது விரிவுரையாள‌ரிட‌ம்(பெய‌ர்சொல்ல‌ வேண்டிய‌தில்லை) கொடுத்த‌போது அத‌னை முழுவ‌தும் நிராக‌ரித்து, என்னைப்ப‌ற்றியும், நான் எங்கே பிற‌ந்தேன், எங்கே வ‌ள‌ர்ந்தேன், எங்கே க‌க்கா போனேன் என்றபாணியில் எழுதுமாறு சொல்லியிருக்கிறார்...! இப்போது நீ சொல் ப‌யிற்றுவிக்கும் ஆசிரிய‌ர்க‌ள் இவ்வாறு இருப்பின் அவ‌ன் என்ன‌ செய்ய‌... நீ சொல்கிறாய் நான் க‌ன‌டா சென்று என‌து அண்ண‌ன் ந‌ட‌த்தும் தொலைக்காட்சியில் நிக‌ழ்ச்சித் தொகுப்பாளியாக‌வோ அல்ல‌து செய்தி வாசிப்பாளியாக‌வோ ஆகியே தீருவேன் என்று... க‌வ‌லைப்ப‌டாதே நீ சொன்னாயே "என‌து உயிர் நீங்கினாலும் ப‌ர‌வாயில்லையென்று" நீ செய்ய‌ப்போகும் செய‌லில் அது ந‌ட‌க்காது..(புர‌ட்சிக்கான‌ தொலைக்காட்சிய‌ல்ல‌வே அது...!) உன‌க்காக‌ pizzaவும், burgerம் காத்திருக்கும் திண்றுவிட்டு pepsi குடித்துக்கொள்...

    காலையில் எழுந்து ப‌ன்னையும், டீயையும் சிற்றுன்டியாக‌ முடித்து ம‌திய‌ சாப்பாட்டுக்கு என்ன‌ செய்யலாம் என்ற‌ நிலையிலும் ஈழ‌ச்சூழ‌லையும், இல‌ங்கை அர‌சையும் புனைவுப்பெய‌ரில் கிழித்துக்கொண்டிருப்ப‌வ‌ன் அவ‌ன் நினைவில் கொள். உண்மையான‌ பெய‌ரில் எழுதினால் கூட‌ இருப்ப‌வ‌னே காட்டிக்கொடுத்துவிடுவான் என்ப‌தையும், அந்த‌ எழுத்துக்க‌ள் அவ‌ன் ம‌திய‌சாப்பாட்டிற்கு கூட‌ வ‌ழிவ‌குப்ப‌தில்லை என்ப‌தையும் உயிரைக்கொடுக்க‌வும் துணிந்த‌ நீ புரிந்துகொள்...

    பதிலளிநீக்கு
  4. தோழி மகிக்கு... நீ சொல்வதில் தவறேதும் இல்லை மகி... ஒப்பிட வேண்டுமென்பது என் எண்ணமும‌ல்ல... நான் கேட்கிறேன் உன் சொந்தத்தின் உயிரை இழபது மட்டுமா இழப்பு? பக்கத்து வீட்டிலிருப்பவன் குடும்பம் சோத்துக்கு வழியில்லாமல் கடல்தாமரை கிழங்கை, விஷமென அறியாமல் சமைத்து திண்று மொத்தமுமாக இறந்ததை இவனது இழப்பாக கருதமாட்டானா என்ன? இதை அறியாமல் அந்த பக்கத்துவீட்டுக்காரன் நிம்மதியாக இருக்கிறான் என்றால் எப்படியிருக்கும்...? நான் இன்னும் முடிக்கவில்லை இந்த கட்டுரையை, அடுத்த பாகமாகவும் எழுதுவேன்... தொடரும்

    எனக்கும் இலங்கை(!) நாய்களுக்கும் வித்தியாசமில்லை என்று என் எழுத்தை புகழ்ந்த நண்பர் செந்திலுக்கு... பெண்ணின் மன‌ம் கஷ்டப்படும்படி எழுதாதே என்று சொல்லியிருக்கலாம் ஏனென்றால் உங்கள் அறிவுரைப்படி செய்யவேண்டுமானால் கட்டுரையில் திருமாவளவன் மனம் கஷ்டப்படுமென்று அதை நீக்க வேண்டும் பல்கலைக்கழகம் கஷ்டப்படுமென்று அதை நீக்க வேண்டும், அந்த விரிவுரையாளர் கஷ்டப்படுவாரென்று அதை நீக்க வேண்டும்..... இப்படி தொடர்ந்தால் தொடக்கம்முதல் முழுவதையும் நீக்கவேண்டும்....

    பதிலளிநீக்கு
  5. என்ன சொல்வதென்று தெரியவில்லை... இதை படித்தவுடன் பல எண்ணங்கள் எனக்குள் கனன்று கொண்டிருக்கிறது.. அதை எப்படி விவரிப்பது எனவும் தெரியவில்லை... இப்பொழுதுதான் கடினமான பிரயாணம் மேற்கொண்டுவிட்டு வந்தேன்.. எதையும் படிக்கும் மனநிலையில் நான் இல்லாவிட்டலும், உன்னுடைய எழுத்து மூலமான உணர்ச்சி வெளிப்பாடு அந்த நிலையை மாற்றிவிட்டது.. வழக்கமான பாராட்டுதலோ, விமர்சனமோ செய்யவேண்டுமென்று எனக்கு தோன்றவில்லை..ம்ற்றும் என்னுடைய விரல்களும் கீப்போர்டும் பிரிவையே விரும்புகிறது.. கனமான இதயத்துடன் விடைபெறுகிறேன்..

    பதிலளிநீக்கு